டெல்லி சன்லைட் காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சனிக்கிழமை காலை 20 வயது சாதனா என்ற பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்குத் முன் வீடியோ ஒன்று பதிவு செய்திருந்தார். அதில் தனது மாமியாரால் தொடர்ச்சியாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், வரதட்சணைக்காக அடிக்கடி அழுத்தம் தரப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

சாதனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி, 21 வயதான யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வீடியோவில் சாதனா கூறியதாவது, “நான் என் குடும்ப விரோதத்தையும் மீறி காதல் திருமணம் செய்தேன்.

ஆனால் திருமணத்தின் பிறகு என் மாமியார் அடிக்கடி அடித்தார், என் கணவரும் அடிக்கடி குடித்து வந்து என்னை தாக்கினார். வரதட்சணைக்காக நிதி அழுத்தமும் தொடர்ந்தது” எனத் தெரிவித்தார். மேலும், திருமண ஆண்டு விழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

சாதனாவின் தாய் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “என் மகள் திருமணத்துக்குப் பிறகு நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக நாங்கள் நகைகளும் ₹1 லட்சம் பணத்தையும் கொடுத்தோம். ஆனால் அத்துமீறல்கள் தொடர்ந்து நடந்தன. என் மகள் உடலில் பல ஆழமான காயங்களுடன் வீடியோ பதிவு செய்த பிறகு தூக்குப்போட்டு தற்கொலை செய்துவிட்டார். இது தற்கொலையா அல்லது கொலையா என்பதை போலீசார் தெளிவுபடுத்த வேண்டும். நீதியை உறுதி செய்ய வேண்டுகிறோம்” எனக் கூறினார்.

சம்பவம் குறித்து தென்கிழக்கு டெல்லி டிஐஜி ஹேமந்த் திவாரி கூறுகையில், “சாதனா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு மரணத்திற்கு காரணம் தெளிவாகும். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். இந்த சம்பவம் சாதனாவின் குடும்பத்தினரிடம் பெரும் வேதனையையும், சமுதாயத்துக்குள் கோபத்தையும் எழுப்பியுள்ளது.