கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி மணியகாரம்பாளையத்தில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அருணின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பாரத பிரதம மந்திரியின் நிதி உதவி திட்டத்தின் கீழ் 5 லட்சம் முதல் 50 லட்ச ரூபாய் வரை வியாபார கடன் பெற்று தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிலிருந்த செல்போன் எண்ணை அருண் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் தன்னை காயத்ரி என அறிமுகப்படுத்திக் கொண்டு அருணின் ஆதார் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை அனுப்புமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் அருணை தொடர்பு கொண்டு 20 லட்ச ரூபாய் வரை கடன் வழங்க முடியும் என கூறினார்.

பின்னர் இன்சூரன்ஸ், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி அந்த பெண் அருணிடமிருந்து 7 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி அருணுக்கு கடன் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அருண் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.