
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செய்துங்கநல்லூரில் காசிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் காசிராஜன் தனியார் நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்து 10 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து காசிராஜன் மற்றொரு நிதி நிறுவனம் மேலாளரான சாமி கண்ணு என்பவரை சந்தித்து நகைகளை திருப்ப பணம் வேண்டும் எனவும், அதனை திருப்பி உங்களிடம் கொடுக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
இதனை நம்பி சாமி கண்ணு கொடுத்த பணத்தை வைத்து காசிராஜன் அந்த தங்க நகைகளை திருப்பி சாமி கண்ணு நிதி நிறுவனத்தில் மறு அடகு வைத்தார். அந்த நகைகளை சோதனை செய்ததில் அது போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து சாமி கண்ணு நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காசிராஜன், அவருக்கு உடந்தையாக இருந்த விமல் பொன் சிங் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.