கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் பகுதியில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் ஜெகன் என்பவர் துணை மண்டல மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் போத்தனூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் எங்களது நிதி நிறுவனத்தில் கோவையைச் சேர்ந்த தர்ஷனா என்பவர் வேலை பார்த்து வந்தார். அவர் 22 பவுன் தங்க நகை இருப்பதாகவும், அதனை வங்கியில் அடமானம் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். அதனை மீட்க 5 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகவும், தங்க நகையை மீட்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பதாகவும் தர்ஷனா கூறினார்.

அவர் கூறியதை நம்பி தங்க நகைகளை மீட்க 5 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணத்தை எங்கள் நிதி நிறுவன நிர்வாகிகள் கொடுத்தனர். ஆனால் தர்ஷனா பணத்தை வாங்கிக் கொண்டு நகையை மீட்டு எங்களிடம் ஒப்படைக்கவில்லை. இதற்கு வேறொரு நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் தர்ஷனா, சுரேஷ் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.