சென்னை மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் விஜயபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புவனேஸ்வரி கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த 2022-ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் செல்போன் மூலம் எங்களை தொடர்பு கொண்டு பேசினார்.

அவர் கோவை இடையர் வீதியில் அஜ்மல் கான், ராஜன், மீரான், தாவூத் ஆகியோருடன் இணைந்து டிரேடிங் கம்பெனி நடத்தி வருவதாக தெரிவித்து என்னிடம் 4 டன் மிளகு அனுப்பி வைத்தால் பணத்தை விரைவில் தருவதாக கூறினார். இதனை நம்பி தனியார் பார்சல் சர்வீஸ் மூலம் கேரளாவில் இருந்து 1.4 டன் மிளகை அவர்கள் கூறிய முகவரிக்கு அனுப்பி வைத்தேன். அதற்குரிய 23 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்கள் தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் தொழிலதிபரான அஜ்மல் கான், ஹோட்டல் உரிமையாளரான ராஜன் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். மற்ற மூன்று பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.