விருதுநகர் மாவட்டத்திலுள்ள தங்கர் சேவல் குண்டாயிருப்பு பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நதியாவிற்கு(32) ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு நதியாவுக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தவமணி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தவமணி நதியாவிடம் இருந்து 17 பவுன் தங்க காசுகள், 17 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை வாங்கினார்.

இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நதியா கேட்டதற்கு தவமணி மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் தவமணிக்கு ஏற்கனவே திருமணமானதை அறிந்து நதியா அதிர்ச்சி அடைந்தார். இதனால் தான் கொடுத்த பணம் மற்றும் தங்க காசுகளை திரும்பத் தருமாறு கேட்டார். ஆனால் தவமணி பணம் மற்றும் தங்கத்தை கொடுக்காமல் மோசடி செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து நதியா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தவமணியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.