கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கள்ளிமடை பகுதியில் பிரியங்கா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரியங்காவின் செல்போன் எண்ணிற்கு ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அந்த குறுந்தகவலில் இருந்த லிங்கை அழுத்தியதும் செல்போன் எண் டெலிகிராம் குரூப்பில் இணைந்தது.

இதனையடுத்து பிரியங்காவை தொடர்பு கொண்டு பேசிய நபர் ஆன்லைன் மூலம் பணிகளை முடித்தால் உடனுக்குடன் பணம் கிடைக்கும் என தெரிவித்தார். ஆனால் பணம் செலுத்தியே அந்த வேலையில் சேர முடியும் என கூறினார். இதனை நம்பி பிரியங்கா 8 ஆயிரம் ரூபாய் செலுத்தி பணிகளை முடித்த பிறகு அவருக்கு 10,500 ரூபாய் கிடைத்தது.

இதனால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசையில் பல்வேறு கட்டங்களாக பிரியங்கா 8 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தினார். அதன் பிறகு அவரது வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரியங்கா கோவை மாநகர சைபர் பாளையம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோசடி செய்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.