கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலஞ்சியை சேர்ந்த மேரி ஸ்டெல்லா என்பவர் தலைமையில் 10-க்கு மேற்பட்ட பெண்கள் நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு இயங்கி வரும் சங்கம் மூலமாக கடன் வாங்கி தருவதாக ஒரு பெண் எங்களிடம் தெரிவித்தார். முதலில் 30 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தினால் 3 லட்ச ரூபாய் கடன் கிடைக்கும் எனவும், அதில் பாதிப்பணம் தள்ளுபடி ஆகும் எனவும் அந்த பெண் கூறினார்.

இதனை நம்பி நூற்றுக்கணக்கான பெண்கள் அவரிடம் 60 லட்ச ரூபாய் வரை பணம் செலுத்தி இருக்கிறார்கள். ஆனால் கூறியபடி அந்த பெண் முன்பணம் கொடுத்தவர்களுக்கு கடன் வாங்கி தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது டெல்லியில் இருந்து பணம் வரவில்லை என தெரிவித்தார். அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் என வந்தது. மேலும் நேரில் சென்று பார்த்த போது சம்பந்தப்பட்ட நபர்கள் பணமே வாங்காதது போல பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.