திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் காந்தி ரோட்டில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தனியார் கன்சல்டன்சி நிறுவனம் அமைந்துள்ளது. அவர்கள் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 5 பட்டதாரி வாலிபர்கள், ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் என 8 பேரிடமிருந்து 18 லட்சம் ரூபாயை வாங்கியுள்ளனர். அவர்கள் போலி பணி நியமன ஆணையை வழங்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் தனியார் கன்சல்டன்சியின் உரிமையாளர் மீனாட்சி, மேலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் கன்சல்டன்சி நடத்தி வருகின்றனர். இவர்கள் மலேசியா, போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு 250 பேரை வேலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் டெல்லியில் இருக்கும் ரீகன் கன்சல்டன்சி என்ற நிறுவனம் மூலம் வேலைக்கு ஆட்களை அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்காக மும்பை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருக்கின்றனர். இந்நிலையில் போலந்து மற்றும் ருமானியா நாடுகளில் இருக்கும் நிறுவனத்தின் மூலம் இவர்கள் போலி பணி நியமன ஆணையை பெற்றுள்ளனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வாங்கிய பணத்தை போலந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். இவர்கள் வேலை கேட்டு வரும் நபர்களிடம் இருந்து 1 லட்ச ரூபாய் முதல் 1 1/2 லட்ச ரூபாய் வரை வாங்குகின்றனர்.

இதனையடுத்து கமிஷன் தொகையாக ஒரு நபருக்கு 15,000 முதல் 20 ஆயிரம் வரை எடுத்துக் கொண்டும், விமான கட்டணம், விசா பெறுவதற்கு செலவு செய்தது போக மீதி பணத்தை இவர்களே வைத்துக் கொள்வதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மீனாட்சி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதுவரை இவர்களிடம் 60 முதல் 70 பேர் வரை ஏமார்ந்தது தெரியவந்தது. வேலை வாங்கி தருவதாக வரும் போலி விளம்பரங்களை நம்பி வாலிபர்கள் ஏமாற வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.