நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்திரா காலனியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிக்கி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணி, சிவகுமார் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 6-ஆம் தேதி முதல் மணியை காணவில்லை. இதனால் சிக்கி மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் எனது மகன் மணிக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. அவர் காணாமல் போய்விட்டார். அதே சமயம் சில அடையாளம் தெரியாத நபர்கள் காரில் வந்து எனது மகன் குறித்து விசாரித்ததாக இளைய மகன் சிவகுமார் கூறினார்.

மேலும் அவர்கள் எங்கள் வீட்டு கொட்டகையை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். எனவே மணியை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணியை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று மசினகுடி விநாயகர் கோவிலுக்கு செல்லும் சாலையோரம் கடுமையான துர்நாற்றம் வீசியதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொதுமக்கள் உதவியுடன் கழிவுநீர் கால்வாயை தோண்டி பார்த்தனர். அப்போது மணியின் உடல் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மணியை யாராவது அடித்துக் கொலை செய்துவிட்டு உடலை சாக்கடையில் வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.