
உத்தரபிரதேசம் மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறவிருந்த திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து, பந்தல் அலங்கரிக்கப்பட்டு, மணப்பெண் தயாராக இருந்த நிலையில், மணமகன் நீரஜ் குமார் திடீரென காணாமல் போனார்.
அவரது தந்தை கூறியதாவது, வீட்டில் சேமித்து வைத்த பணத்தை எடுக்க வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பவில்லை என்றும், பலமுறை தேடியும் எங்கேயும் கிடைக்கவில்லை என கூறியுள்ளனர். இது தொடர்பாக ஜுனாவாரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருமண நேரம் நெருங்கியதால், பெண் வீட்டார் அதே குடும்பத்தில் உள்ள இளைய சகோதரர் விஷ்ணுவை மணமகனாக அழைத்து வருமாறு கேட்டுக் கொண்டனர். விஷ்ணுவும் உறவினர்கள் ஊர்வலமாக வந்தபோது, மணப்பெண் வீட்டார் கடும் எதிர்வினை காட்டினர்.
நொந்த மனதுடன் இருப்பதாக கூறிய அவர்களது உறவினர்கள், திருமணக் கூட்டத்தினரை பிணைக் கைதியாக வைத்திருந்ததோடு மட்டுமின்றி, அவர்களிடமிருந்து மதிப்புள்ள பொருட்கள் மற்றும் நகைகளை பறித்தனர். தொடர்ந்து அவர்களை தாக்கியதும், திருமணத்தை நடத்தாமல், மணமகளையும் கொடுக்காமல், வெறுமனே ஊர்வலத்தை திருப்பி அனுப்பியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, ஜலேஷ்வர் காவல் நிலையத்தில் மணமகன் வீட்டார் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், பிணைக் கைதி வைத்தல், தாக்குதல் மற்றும் கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, காணாமல் போன நீரஜ் குமாரை தேடும் பணியில் ஜுனாவாரி காவல் நிலையமும் ஈடுபட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீசார், இரு தரப்பிடமும் நேர்மையாக விசாரணை நடைபெறும் எனவும், குற்றவாளிகள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.