கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூர் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுவன் குளச்சலில் இருக்கும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 9- ஆம் தேதி சிறுவன் ஏழாயிரம் ரூபாய் பணம், துணிகளுடன் காணாமல் போய்விட்டார். அப்போது சிறுவனது அறையை பெற்றோர் சோதனை செய்தனர். அப்போது சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் “அன்புள்ள அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு படிப்பதற்கு விருப்பமில்லை. என்னை அடிக்கடி படிக்க வற்புறுத்துகிறீர்கள். இதன் காரணமாக வீட்டை விட்டு கண்காணாத இடத்திற்கு செல்கிறேன். அங்கு ஒரு சிறிய வேலை செய்தாவது வாழ்க்கையில் முன்னேறுவேன்.

என்னை தேட வேண்டாம். இனி நான் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரவே மாட்டேன். நீங்கள் போலீசில் புகார் செய்தால் வரும் வழியிலேயே நான் இறந்து விடுவேன். அதனை மீறி போலீசார் என்னை வீட்டிற்கு அழைத்து வந்தால் நான் வீட்டிலேயே தூக்கில் தொங்கி விடுவேன். நான் கண்காணாத இடத்திற்கு சென்று எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழப் போகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்” என எழுதி உள்ளார். இது தொடர்பாக மாணவனின் தந்தை குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.