
மதுரை முழுவதும் இருக்கும் 72 ஆயிரத்துக்கும் அதிகமான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு 180 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவி வழங்கும் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று(பிப்.6) துவங்கி வைத்தார். இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது “இவ்வளவு பெரிய தாய்மார்களின் கூட்டத்தை இத்தகைய எழுச்சியுடன் எங்கும் பார்த்ததில்லை.
கண்ணகி ஒற்றை சிலம்பை வைத்து நீதி கேட்டதை போன்று, ஒற்றை செங்கல்லை வைத்து நான் நீதி கேட்க காரணமாக இருந்தது இந்த மண்தான். தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற அந்த ஒற்றை செங்கலானது மதுரையில் எடுத்தது தான். இதனிடையில் திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் மதுரையின் வாழ்வாதாரம் உயர்ந்துகொண்டே செல்கிறது.

இதற்கிடையில் இந்த பட்ஜெட்டில் கூட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கவில்லை. இதன் காரணமாக 2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதும் அதே செங்கல்லை தான் தூக்கவேண்டிய ஒரு நிலை வரும். மதுரை மக்கள் அனைவரும் செங்கல்லை கையிலெடுக்கும் முன் நிதி ஒதுக்கி கட்டுமான பணிகளை தொடங்குங்கள்” என்று பேசினார்.