தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மேம்பாட்டு பணிகள் தாமதம் இல்லாமல் நிறைவேற்றப்படும் வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நிதி உதவி, வேலை வாய்ப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம்  போன்றவை கால தாமதம் இல்லாமல் வழங்கப்பட வேண்டும். அதேபோல் ஆதிதிராவிடர் பழங்குடியின நல பள்ளி, கல்லூரி விடுதிகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து நில நிர்வாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்த ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பிரதம மந்திரி முன்னோடி கிராமத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் பற்றி சிறப்பு கவனம் செலுத்தி பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் பற்றி ஒவ்வொரு வாரமும் ஊரக வளர்ச்சி துறையுடன் இணைந்து ஆய்வு கூட்டங்களை நடத்த வேண்டும். தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் போன்ற வாரியங்களில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை சேர்த்து வாரிய உறுப்பினர்களின் தேவைகளின் அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.