ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்தது.. ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  சரியாக இன்று 3 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இதனால் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் நுழைவு வாயில் அடைக்கப்பட்டுள்ளது. 3 மணிக்கு முன்பாக வந்தவர்கள் வரிசைப்படி அமர வைக்கப்பட்டு, அவர்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அந்த வேட்பு மனுக்கள் ஆனது தாக்கல் செய்யப்பட்டு வருகிறது..

தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று மட்டும் 15க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நேற்று வரை 51 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இன்றுடன் சேர்த்து 70க்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக பிரதான கட்சிகளான வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.. அதன்படி திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் இளங்கோவன் அதிமுக சார்பில் தென்னரசு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சிவப்பிரசாந்த், அதேபோல நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் தேமுதிக சார்பில் ஆனந்த் என பிரதான கட்சிகளை சேர்ந்தவர்களும், சுயேட்சை வேட்பாளர்கள் 70க்கும் மேற்பட்டோரும் இந்த இடைத்தேர்தலில் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதில் குறிப்பாக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் என்பவரும், எடப்பாடி தரப்பில் தென்னரசு என்பவரும் நிற்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி எடப்பாடி பழனிசாமி அணி வெற்றி பெற்றதை அடுத்து, ஓபிஎஸ் அணி வேட்பாளரை வாபஸ் பெற்றது. தொடர்ந்து தென்னரசு இறுதி நாளான இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சரியாக 12 :15 நிமிடத்தில் வேட்புமனுவை தென்னரசு தாக்கல் செய்தார். இந்த வேட்பு மனுவில் அதிமுகவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட்ட ஏ மற்றும் பி படிவம் இணைக்கப்பட்டிருந்தது. வேட்பு மனுவை  தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம்  தாக்கல் செய்தார்.

இந்நிலையில் வேட்புமனு பரிசீலனை நாளை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து வேட்புமனுக்களை திரும்பப்பெற பிப்ரவரி 10ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.