தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கியதோடு, இனி சினிமாவை தவிர்த்து விட்டு முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுபட உள்ளதாக  தெரிவித்த நிலையில், அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன. அதன்படி, விஜயின் ரசிகர்கள் சிலரே விஜய் அவர்களை  சினிமாவில் பார்க்க பிடிக்கும். ஆனால் அரசியலில் அது சரியாக இருக்காது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்றொருபுறம் அவரது ரசிகர்கள் ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல், பொது மக்கள் சிலரும் விஜயின் அரசியல் எப்படி இருக்கும் என்பதை காண ஆவலாக இருப்பதுடன் அவருக்கு வாக்களிக்கவும் தயார் நிலையில் உள்ளனர். அதற்கு காரணம் தமிழகத்தை பொருத்தவரையில், மிகப்பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் சினிமா பின்பலத்தை மையமாகக் கொண்டு வந்தவர்களே.

அந்த வகையில் விஜய் அவர்களின் அரசியல் வருகை எம்ஜிஆர் அரசியல் க்கு வருகை தந்த போது எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்ததோ ? அதே அளவிலான எதிர்பார்ப்பை தந்துள்ளது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது. ஆனால் எம்ஜிஆருக்கு இணையான பெயரும், புகழும், வெற்றியும் அரசியல் களத்தில் விஜய் பெறுவாரா?  என்பது அவரது செயலை பொறுத்தது என மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.