மகாராஷ்டிரரா நாந்தேட் மாவட்டத்தில் மருத்துவ மாணவியின் கழுத்தை நெரித்து, தீ வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாந்தேட் மாவட்டத்தின் பிம்ப்ரி மஹிபால் கிராமத்தில் சுபாங்கி ஜோக்தந்த்(22) என்பவர் இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இதற்கிடையில் மருத்துவ மாணவிக்கு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தன் குடும்பத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரிடம் தான் வேறொருவரை காதலிப்பதாக மருத்துவ மாணவி தெரிவித்து உள்ளார். இதனால் நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பெண் வீட்டார் துயரத்தில் ஆழ்ந்த நிலையில், மகளை கொன்றுவிட வேண்டும் என முடிவு செய்தனர்.

இந்த நிலையில் பெண்ணின் தந்தை, சகோதரர், குடும்ப உறவினர்கள் இணைந்து ஜன,.22ம் தேதியன்று இரவு மருத்துவ மாணவியை அருகிலுள்ள பண்ணைக்கு அழைத்து சென்று, கழுத்தை நெரித்துக் கொன்று, தீ வைத்து எரித்து உள்ளனர். மேலும் கொலை செய்த அடையாளங்களை மறைக்க எரிந்த உடலை அருகிலுள்ள ஓடையில் வீசி உள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தந்தை, சகோதரன் உறவினர் போன்றோர் இணைந்து மருத்துவ மாணவியை கொலை செய்தது அம்பலமாகியது. அதன்பின் குற்றம்சாட்டப்பட்ட5 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.