உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு சேமிப்பு  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகளுக்கான நிதி பாதுகாப்பு திட்டங்கள் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.

சுகன்யா சம்ரிதி யோஜனா

பெண் குழந்தைகளின் உயர் கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் அடிப்படையில் மத்திய அரசின் ஆதரவுடன் இயங்கி வரும் சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்று தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா. இத்திட்டத்தில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கைத் திறக்கலாம். குறைந்தப்பட்ச தொகை ரூ.250 -ரூ.1.5 லட்சம் வரையிலான வைப்பு நிதியை செலுத்த முடியும். இந்த திட்டத்தின் முதிர்வுகாலம் 21 வருடங்கள் (அ) குழந்தைகள் 18 வயதை எட்டியதும் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இதில் 7.6% வட்டி விகிதம் கிடைப்பதால் கண்டிப்பாக குழந்தைகளின் எதிர்காலத்துக்கான பாதுகாப்பு திட்டமாக அமைகிறது.

பாலிகா சம்ரிதி யோஜனா

இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும் எனில், கிராமம் மற்றும் நகர்புறங்களிலுள்ள பெண் குழந்தைகள் இந்திய அரசால் வரையறுக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். அதோடு கடந்த 1997 ஆகஸ்ட் 15 (அ) அதற்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் பெண் குழந்தை பிறந்த பிறகு 500 ரூபாயும், பின் 10ம் வகுப்பு கல்வியை படிக்கும் வரை வருடத்திற்கு 300 -1000 ரூபாய் வரையிலான நிதியினை இத்திட்டம் வழங்குகிறது. மேலும் 18 வயதிற்கு பின் திருமண (அ) கல்வி உதவித்தொகையையும் இத்திட்டத்தின் வாயிலாக பெற முடியும் வசதிகள் இருக்கிறது.