தேனி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கும் மேற்பட்டோர்  கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில நலவாரிய உறுப்பினர் கருப்பையா தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் எனவும் வேலைவாய்ப்பில் 4% முன்னுரிமை வழங்க வேண்டும்.

மேலும் உழவர் சந்தைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்து தரவும் மற்றும்  மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியில் போதிய அளவு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கோஷங்கள் எழுப்பி, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்ற போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் அவர்களை மனு கொடுக்க போலீசார் அனுமதித்த நிலையில், அவர்கள் வரிசையாக நடந்து சென்று கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.