தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை கருப்புசாமி கோவில் தெருவில் ராமகிருஷ்ணன்(45) என்பவர் வசித்து வந்தார். இவர் கும்பகோணம் மாநகராட்சி குப்பை கிடங்கில், தற்காலிக பணியாளராக இருந்தார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் நேற்று முன்தினம் மதிய நேரத்தில் வேலை செய்யும் இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது சாக்கடை அமைக்கும் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பியில் அவரது மோட்டார் சைக்கிள் நிலைத் தடுமாறி விழுந்ததில் ராமகிருஷ்ணனின் கழுத்தில் கம்பி குத்தியுள்ளது.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் பின் ராமகிருஷ்ணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். எனவே இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.