மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைப் பெண்புலி என்று புகழ்ந்துள்ள ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி, அவர் ஒருபோதும் மத்தியப் புலனாய்வு அமைப்புகளிடம் சரணடைய மாட்டார் என்று தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் ஐ-பேக் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள மெகபூபா முஃப்தி, அமலாக்கத்துறை மற்றும் பிற புலனாய்வு அமைப்புகளின் இத்தகைய நடவடிக்கைகள் ஜம்மு-காஷ்மீரில் நீண்டகாலமாக ஒரு சாதாரண விஷயமாகிவிட்டதாகவும், தற்போது அந்த நிலை நாடு முழுவதும் பரவி வருவதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டபோது, மெகபூபா முஃப்தி, பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா ஆகிய மூன்று முன்னாள் முதலமைச்சர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதை அவர் தனது உரையில் நினைவு கூர்ந்தார். அப்போது எதிர்க்கட்சிகள் பல மௌனம் காத்த நிலையில், தற்போது அதே போன்ற அடக்குமுறைகளை நாடு முழுவதும் பார்க்க முடிகிறது என்று அவர் கூறினார்.

இருப்பினும், மம்தா பானர்ஜி மிகவும் தைரியமானவர் என்றும், மத்திய அரசுக்கு எதிராக அவர் திறம்படப் போரிடுவார் என்றும் மெகபூபா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐ-பேக் நிறுவன சோதனையின்போது மம்தா பானர்ஜி நேரடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மெகபூபாவின் இந்தப் பாராட்டு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.