தற்போது வாட்ஸ்அப் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதாவது, வாட்ஸ்அப் யூசர்களின் தொலைபேசியின் மைக்ரோபோனை அணுகுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த குற்றச்சாட்டை பொறியாளர் ஒருவர் முன்வைத்திருக்கிறார். அப்போது இருந்து உலகின் கவனம் இவ்விஷயத்தில் திரும்பியது. குற்றச்சாட்டுகளை முன் வைத்தவர் அதுகுறித்த ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்து உள்ளார். பொறியாளர் தவிர்த்து பல பயனர்களும் இதுபற்றி வாட்ஸ்அப் நிறுவனத்திடம் புகாரளித்துள்ளனர்.

உங்களது மைக்ரோபோனை வாட்ஸ்அப்  அணுகுவதாக நீங்கள் சந்தேகித்தால், உடனே அதைச் சரிபார்க்கவும். இதற்கு ஒரு சுலபமான முறை இங்கே கூறப்படுகிறது. இதனை பயன்படுத்தி நீங்கள் உண்மை என்னவென்று தெரிந்துக்கொள்ளலாம். முதலாவதாக உங்களது போனுக்குச் சென்று வாட்ஸ்அப் அமைப்பை திறக்கவும். அமைப்பை திறந்த பின், வாட்ஸ்அப் தனியுரிமைக்குச் செல்ல கிளிக் செய்ய வேண்டும்.

தனி உரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கு சென்றபின் மைக்ரோஃபோனைப் பயன்படுத்தும் அனைத்து பயன்பாடுகளின் கால வரிசையையும் பார்க்கவேண்டும். உங்களது வாட்ஸ்அப் மைக்ரோஃபோனை பயன்படுத்துகிறதா இல்லையா என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளலாம். நீங்கள் ஆண்ட்ராய்டு-12 (அ) அதற்கு மேற்பட்ட பதிப்பை பயன்படுத்துகிறீர்கள் எனில், இவ்வகை சிக்கலை நீங்கள் பார்க்கலாம். புகாரை பெற்ற வாட்ஸ்அப் அதற்கு பதிலளித்து உள்ளது. பிழை காரணமாக இது நடந்திருக்கவேண்டும் என வாட்ஸ்அப் விளக்கமளித்துள்ளது.