
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கி 40 நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் மகா கும்பமேளாவில் புனித நீராடி விட்டு ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் சிலர் மினி பேருந்தில் ஏறி வீட்டிற்கு திரும்பினர்.
அந்தப் பேருந்து இன்று மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆந்திராவை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.