மதுரை-போடி இடையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலே மீட்டர்கேஜ் ரெயில் பாதை போடப்பட்டு  ரெயில் போக்குவரத்து தொடங்கபட்ட நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு இந்த குறுகிய ரெயில் பாதையை, அகல ரெயில் பாதையாக மாற்றும் திட்டம்  அறிவிக்கபட்டது. இதனால் ரெயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கபட்டு, பின் அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-தேனி இடையே பயணிகள் ரெயில் சேவை கடந்த ஆண்டிலிருந்து மீண்டும் இயக்கப்பட்டது. தேனி-போடி இடையே அகல் ரெயில் பாதை பணிகள் முடிந்து, போடி வரை ரெயில் சோதனை ஓட்டம் கடந்த மாதம் நடத்தப்பட்டது.

இதன்பின் ரெயில்வே பாதுகாப்பு ஆணையரும் இதனை ஆய்வு செய்து, இதில் ரெயில் இயக்கபட  ஒப்புதல் வழங்கினார். இதனை தொடர்ந்து இந்திய ரெயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் போடி வரை ரெயில் சேவை  நீட்டிக்கபட்டு இயக்கபடுகிறது. அதன்படி தினந்தோறும் மதுரையில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு 9.35 மணிக்கு தேனிக்கு வந்தடைகிறது. இதன்  பிறகு காலை 9.42 மணிக்கு தேனியில் இருந்து போடிக்கு புறப்படுகிறது.

மேலும் அந்த பயணிகள் ரெயில் மீண்டும் மாலை 5.50 மணிக்கு போடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ,  தேனிக்கு 6.15 மணிக்கு வந்தடைகிறது. அதன் பிறகு தேனியில் இருந்து புறப்பட்டு,  மதுரை ரெயில் நிலையத்தை இரவு 7.50 மணிக்கு  வந்தடைகிறது.