நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் நேற்று மீன் மார்கெட்டில் மீன்களை வாங்குவதற்கு குவிந்தனர். பொங்கல் பண்டிகை மற்றும் அய்யப்ப பக்தர்கள் விரதம் உள்ளிட்ட காரணங்களால் மீன் விற்பனை சில வாரங்களாக சற்று மந்தமாக இருந்தது. இந்நிலையில் தற்போது ஐயப்ப பக்தர்கள் தங்களது விரதத்தை முடித்துள்ளதால் சைவத்தில் இருந்து அசைவத்திற்கு மாறி உள்ளனர். மேலும் பொங்கல் பண்டிகையும் நிறைவடைந்துள்ளதால், நேற்று வழக்கத்தைவிட மார்க்கெட்டில் அதிக மக்கள் கூட்டமும், விலையும் அதிகமாக இருந்தது.

இங்கு விற்பனை செய்ய கொண்டு வரும் மீன்கள் திசையன்விளைக்கு அருகே உள்ள கடற்கரை கிராமங்களான நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்பனை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல், கூடுதாழை, தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை, ஆலந்தலை, மணப்பாடு போன்ற இடங்களில் இருந்து வருகிறது.