
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கனமழை பெய்ததால் பலத்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றும் சம்பத்(28) என்ற காவல்துறையினர் திருநெல்வேலிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண்ணுடன் சம்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் நெருக்கமாகி நாளடைவில் அந்தப் பழக்கம் காதலாக மாறி உள்ளது.
பின்னர் சம்பத் தனது சொந்த ஊரான கடலூருக்கு அந்த இளம்பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனியார் லாட்ஜ் ஒன்றை எடுத்து தங்க வைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை அடுத்து அந்தப் பெண் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், சம்பத் அதனை மறுத்துள்ளார். அதனால் மன அழுத்தத்தில் இருந்த இளம்பெண் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகார் கடலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சம்பத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.