
கர்நாடகா மாநிலம் காவேரி மாவட்டத்தின் சவனூரில் இருந்து 25க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகளை லாரியில் ஏற்றி உத்தர கன்னடம் மாவட்டத்தின் கும்தா பகுதியில் உள்ள சந்தைக்கு கொண்டு சென்றனர். அப்போது லாரி அர்பைல் காட் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவர்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 காய்கறி வியாபாரிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலை பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகுந்த கவலை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன். அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு PMNRF-ல் இருந்து 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ செலவுக்காக 50 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார்.