புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்வாகியுள்ளதாக அதிகார்வப்பூர்வ அறிக்கை வெளியிட்டது மத்திய அரசு. புதிய தேர்தல் ஆணையர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். பிரதமர் தலைமையில் நடைபெற்ற தேர்தல் ஆணையர் தேர்வு குழு கூட்டத்தில் இரண்டு ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

கேரளாவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஞானேஷ்குமார் ஒன்றிய அரசின் கூட்டுறவு துறை செயலாளராக இருந்தவர். பஞ்சாப் மாநில ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.எஸ் சாந்து உத்தரகாண்ட் மாநில தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஞானேஷ்குமார் கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். சட்டப்பிரிவு 377 ரத்து செய்யப்பட்டபோது காஷ்மீரை நிர்வகித்த அதிகாரிகளில் ஞானேஷ்குமாரும் இருந்தார்.

இதனிடையே பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேர்தல் ஆணையர்கள் தேர்வு கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தேர்தல் ஆணையர்கள் தேர்வு முறை ஒருதலைப் பட்சமாக நடந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் முழுமையான விவரங்கள் இல்லாமல் 212 பேர் கொண்ட பட்டியலை கொடுத்து அவசரகதியில் தேர்வு கூட்டம் நடத்தப்பட்டதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.