விழுப்புரம் மாவட்டம் திருவென்னைய்நல்லூர் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் மரக்காணத்தை சேர்ந்த பிரபல சாராய வியாபாரி மதன்குமார் என்பதும், சாராய விற்பனை செய்ய முடியாததால் குட்காவை பெங்களூரில் இருந்து கடத்தி வந்து ஆனந்தூரில் வீடு வாடகைக்கு எடுத்து பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 280 கிலோ குட்கா மற்றும் ஒரு இருசக்கர வாகனம், 6 செல்போன் மற்றும் 71 ஆயிரம் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.