அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்ததால் அவர் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம். அதிமுகவை 8 முறை தோல்வி அடையச் செய்த எடப்பாடியை கண்டிக்கிறோம். சமத்துவ பேரியக்கத்தை சமுதாய இயக்கமாக மாற்றிய எடப்பாடி வெளியேறு வெளியேறு என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் நிலக்கோட்டை தொகுதியில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பைச் சேர்ந்த தேன்மொழி சேகர் என்பவர் எம்எல்ஏவாக இருக்கும் நிலையில் அந்த தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டி இருப்பது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.