தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.

அதன்பின் சிடிஆர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும் பா.ஜ.க ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். அதோடு சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங் நிர்வாகிகள் கூண்டோடு அக்கட்சியிலிருந்து ராஜினாமா செய்தனர். அதன்படி சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவு தலைவர் அன்பரசு, சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவை சேர்ந்த 10 செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். அதனை தொடர்ந்து இவர்கள் 13 பேரும் சிடி நிர்மல் குமாரை பின்பற்றி அதிமுகவில் இணையப் போவதாக அறிவித்தனர்.

தற்போது அதிமுக-பாஜக இடையே பிரச்சனை இருப்பதாக திமுக ஒரு பிம்பத்தை உருவாக்கி வருகிறது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், அதிமுக -பாஜக இடையேயான கூட்டணி வலுவாக உள்ளது. எந்த பிரச்சனையும் இல்லை. பிரச்சனை இருப்பது போல் திமுக அரசியல் விளையாட்டு செய்கிறது. இதற்கு எல்லாம் மக்கள் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.