திண்டுக்கல் மாவட்டம் எரியோடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது உறவினர்களுடன் குமரி மாவட்டம் இரணியல் வந்துள்ளார். அவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தான் கட்டிட வேலை பார்த்து வருவதாகவும் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது 2 குழந்தைகளுக்கு தாயான தனது மனைவி மாயமாக இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். இது பற்றி விசாரணை நடத்திய போது குமரி மாவட்டம் பேயன்குடி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் தனது மனைவி வந்ததும், அவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பது தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் அந்த வாலிபரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது தான் யாரையும் அழைத்து வரவில்லை என்று கூறினார். இருப்பினும் சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் விசாரித்த போது ஒரு கோவிலில் வைத்து வாலிபருக்கும், திண்டுக்கல் பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் அந்த பெண்ணையும் வாலிபரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

அப்போது அந்த பெண் திண்டுக்கல் தொழிலாளி தனக்கு 4-வது கணவர் என்றும், அவர் மது அருந்திவிட்டு வந்து தாக்குதல் நடத்தியதாகவும் அவரது செயல்பாடுகள் பிடிக்காமல் தான் தன்னுடன் வேலை செய்த குமரி மாவட்ட வாலிபர் உடன் இணைந்து வாழ விரும்பி வந்ததாகவும் கூறினார். ஆனால் அவர் முறைப்படி விவாகரத்து செய்யாத நிலையில் திருமணம் செய்வது தவறானது என அவருக்கு அறிவுரை கூறிய காவல்துறையினர் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இணைந்து வாழுமாறு கூறினர். ஆனால் அந்த பெண் கணவர் மற்றும் மகன்களை உதறிவிட்டு பேயன் குழி வாலிபருடன் சென்றுவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.