சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அமராவதி புதூரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அமராவதி புதூர் ஊராட்சியில் தற்காலிக அடிப்படையில் தெரு விளக்குகளை பராமரிக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரம் காந்திநகர் பகுதியில் மின்விநியோகம் தடைப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் பாலகிருஷ்ணன் அப்பகுதிக்கு சென்று டிரான்ஸ்பார்மரை அணைத்து விட்டு மின்விநியோகம் தடைபட்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏறி பழுது பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அருகே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் பாலகிருஷ்ணனின் தலை பட்டது. இதனால் மின்சாரம் பாய்ந்து தலைகீழாக தொங்கிய நிலையில் பாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை அறிந்த உறவினர்கள் பாலகிருஷ்ணனின் உடலை வாங்க மறுத்து நிவாரண உதவி தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேவகோட்டை- காரைக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காரைக்குடி மாங்குடி எம்.எல்.ஏ, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், தாசில்தார் தங்கமணி ஆகியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.