நீலகிரி மாவட்டத்தில் தற்போது நவம்பர் முதல் ஜனவரி தொடக்கம் வரை ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 13 இடங்களில் நிலச்சரிவும், 23 இடங்களில் மரங்களும் விழுந்துள்ளன. பல்வேறு பகுதிகளில் பாறைகள் விழுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் மக்களை பாதுகாப்பதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் பனிப்பொழிவு காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மேகக் கூட்டங்கள் தரைமட்டத்தை நெருங்குகின்றன.

குறிப்பாக குன்னூர் பகுதியில் காலையில் அதிக பனிமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத வகையில், வாகன ஓட்டிகள் குன்னூர் மலைப்பாதையில் முகப்பு விளக்குகளை எரிய வைத்து எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குகின்றனர். குன்னூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், 50 ஆண்டுக்கு பிறகு இப்படியான வரலாறு காணாத பனிமூட்டம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கனமழையால் மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் உறைபனி தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். காலை 10 மணிக்குப் பிறகும் அடர்ந்த மூடுபனி நீடிப்பதால், கடும் குளிரில் அப்பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.