சேலம் குகை மாரியம்மன் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் வருடந்தோறும் ஒவ்வொரு தை மாத முதல் நாளில் திருவிழா நடத்தப்படுவது வழக்கமாகும். அதன்படி இந்த வருடமும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா நேற்று நடந்தது. அப்போது உலகம் செழிப்பாக இருக்க, குடும்பம் சந்தோஷமாக திகழ, திருமண வரம் வேண்டி உட்பட பல வேண்டுதல்களை அம்மனுக்கு வைக்கும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் வீரகுமாரர்கள் தங்களது உடலில் கத்தி போட்டு அம்மனை வரவேற்றனர்.
கத்திப் போடுதல் என்பது தனது உடம்பில் கத்தியால் குத்தி காயங்களை ஏற்படுத்துவது ஆகும். ஆயிரத்துக்கும் அதிகமான வீரக்குமாரர்கள் சேலம் செவ்வாய்பேட்டை கரி மார்கெட் பகுதியில் அம்மனை அழைத்து உடலில் கத்திபோட்டுக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். இந்த அம்மன் திருவிழா வருகிற 18ம் தேதி வரை நடைபெற இருகிறது. இந்த நாட்களில் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் கத்திபோடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.