74-வது குடியரசு தின விழா சென்னை காமராஜர் சாலையில் நடந்தது. உழைப்பாளர் சிலை அருகில் நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். வழக்கமாக குடியரசு தின விழா சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள காந்திசிலை அருகே நடைபெறும். தற்போது அங்கு மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் நடப்பு ஆண்டு உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த குடியரசு தின விழா நிகழ்ச்சி அணி வகுப்பில் “தமிழ்நாடு வாழ்க” எனும் வாசகத்துடன் செய்தி ஒளிபரப்புத்துறையின் வாகனம் முதலாவதாக வந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் “தமிழ்நாடு வாழ்க” என்ற வாசகத்துடன் வந்த வாகனம் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.