கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துயரச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த கூட்ட நெரிசலுக்கு காரணமான சூழ்நிலைகளை ஆராயும் வகையில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் மூன்று மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவு பெற்றது. இந்நிலையில் வரும் 13-ஆம் தேதி உச்சநீதிமன்றம் இதுகுறித்து தீர்ப்பு வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.