முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸில் வந்தபோது “துரோகம் செய்த எடப்பாடியுடன் பயணிக்கிறேன். 10.5% இடஒதுக்கீடு வழங்கி தென்மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்தவர்” என அந்நபர் பேசும் வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் இபிஎஸ்-ஐ விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட ராஜேஸ்வரன் மீது அதிமுகவினர் அளித்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ராஜேஷ்வரனை விமான நிலைய காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் மதுரை விமான நிலையத்தில் இபிஎஸ்-ஐ ஒருமையில் பேசி வீடியோ வெளியிட்ட நபரை தாக்கியதாக EPS உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அதிமுக மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் திமுக பொய் வழக்குப் போட்டிருப்பதாக கூறி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.