கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சுப்பிரமணி என்பவருக்கு கடந்த 16/04/2021 ஆம் தேதி தன் வீட்டில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்க்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி இறந்துவிட்டார். அதன்பின் சுப்பிரமணி இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது தங்கை போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் “இறந்துபோன சுப்பிரமணியின் மனைவி செல்வி (37) என்பவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் ஜெயமுருகன் (45) என்பவருக்கும் 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் சுப்பிரமணிக்கும் அவரது மனைவி செல்விக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து செல்வியும், ஜெயமுருகனும் சேர்ந்து சுப்பிரமணியை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளனர்.

அந்த வகையில் இருவரும் சேர்ந்து பூச்சிக்கொல்லி மருந்தை சுப்பிரமணி வைத்திருந்த மதுவுடன் கலந்து வைத்து உள்ளனர். விஷம் கலந்த மதுவென தெரியாமல் அதை அருந்திய சுப்பரமணி இறந்துள்ளார்” என விசாரணையில் தெரியவந்தது. அதன்பின் செல்வியையும், ஜெயமுருகனையும்  காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்த விசாரணை கள்ளக்குறிச்சி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் வழக்கை விசாரித்தை நீதிபதி கீதா, காவல்துறை அளித்த சாட்சியங்களின் படி செல்வி மற்றும் ஜெயமுருகன் குற்றவாளி என உறுதிசெய்து, இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.31,500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.