திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வெள்ளகுட்டை கிராமத்தில் வசிப்பவர் பாபு. விவசாயியான இவர் காளை மாடு ஒன்றை வளர்த்து வரும் நிலையில், அந்த மாட்டை  மாடு விடும் விழாவுக்காக  தயார்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் பல போட்டிகளில் அந்த காளை கலந்து கொண்டு முதல்பரிசினை வென்றுள்ளது. இதனால்  அந்த காளைக்கு வெள்ளகுட்டை பைபாஸ் என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் இந்த காளையானது கலந்து கொண்டு, இலக்கை நோக்கி ஓடி முதல் பரிசினை வென்றுள்ளது. இந்த பந்தயத்தில் ஓடிய போது திடீரென மாட்டின் கால் முறிந்து எலும்பு இரண்டு துண்டாகி காயமடைந்தது. இதையடுத்து வேலூர் கால்நடை மருத்துவமனைக்கு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய  மாட்டினை சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின், படுகாயமடைந்த காளைக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். அதன்படி டாக்டர் நாசர் தலைமையில் டாக்டர் ரவிசங்கர் மற்றும் குழுவினர் இணைந்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இந்நிலையில் காளையின் காலில் இரும்பு ராடு மற்றும் பிளேட் ஆகியவை அறுவை சிகிச்சைகள் மூலம் பொருத்தப்பட்டு, மேலும் மாட்டின் கால் நரம்பு சிதைந்ததால், அதற்கும் அறுவை சிகிச்சை செய்தனர். இதுபோல்  கால் பகுதியில் உள்ள சதைகள் முற்றிலும் சிதைந்திருந்ததால் தொடையில் இருந்து சதைகளை எடுத்து காலில் பொருத்தி , பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும்  மேற்கொள்ளபட்டது. இவ்வாறு 4 வகை அறுவை சிகிச்சையும் முதன் முதலில் புது  முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.