புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இடையூர் பகுதியில் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த கழிவு நீர் கலக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தண்ணீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு இரட்டை குவளை முறை, கோவில்களுக்கு செல்ல அனுமதிக்காது போன்ற தீண்டாமை முறைகள் வழக்கத்தில் இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வந்தபோது அரசு தரப்பில் புதுக்கோட்டை தீண்டாமை சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை மங்கள நாட்டில் தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை பின்பற்றப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் வெங்கடாசலம் மற்றும் அருள்ராஜ் ஆகியோர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.