
கோச்சிங் சென்டர்களின் காடாக விளங்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட், ஜே .இ.இ உள்ளிட்ட நுழைவு தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றது. ராஜஸ்தானை சேர்ந்த ஷர்மா என்ற மாணவர் கடந்த 3 ஆண்டுகளாக கோட்டா நகரில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில் தேர்விற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டில் நடப்பு மாதத்தில் கோட்டா நகரில் நடந்துள்ள 4 -வது தற்கொலை சம்பவமாகும். கடந்த ஆண்டில் கோட்டாவில் வெவ்வேறு பயிற்சி மையங்களில் பயின்று வந்த 17 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில் மாணவர்கள் காதல் விவகாரங்களால் தற்கொலை செய்து கொள்வதாக ராஜஸ்தான் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு படிப்பு பற்றி அழுத்தம் கொடுக்கக் கூடாது எனவும், எனது வார்த்தைகள் சிலருக்கு எரிச்சலை உண்டாக்கலாம். ஆனால் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதோடு மாணவர்கள் தற்கொலைக்கு பயிற்சி மையங்களின் பங்கு கொஞ்சம் இருக்கலாம் எனவும், சில சமயங்களில் காதல் விவகாரங்களால் கூட மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். அதோடு பெற்றோர்கள் கட்டுப்படுத்த தவறினால் மாணவர்கள் தவறான திசையில் செல்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.