திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன், பேரூராட்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, கரூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 835 காளைகள் கொண்டு வரப்பட்டன. இதனையடுத்து அந்த காளைகளை திருச்சி கால்நடை துறை இணை இயக்குனர் மருதராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். அதில் 4 காளைகள் நிராகரிக்கப்பட்டன. இதன் பின் 831 காளைகள் களமிறக்கப்பட்டு, 262 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இதில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி தலைமையிலான மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு, அதிலும் 3 பேரை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வாடிவாசலுக்கு கொண்டு செல்லும் காளைகளின் டோக்கனை பரிசோதனை செய்யும் பணியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி இருந்தார்.
அப்போது அங்கு கொண்டு வரப்பட்ட காளை ஒன்று அவரை முட்டியதில் அவர் காயம் அடைந்தார்.