
தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைக் கெஞ்சி கூத்தாடி ஆட்சிக்கு வந்த திமுக அரசு அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து நியாயமான தீர்ப்பு காண வேண்டியது அரசின் கடமை. ஆனால் திமுக அரசு கண்துடைப்புக்காக பேச்சுவார்த்தை மட்டும் நடத்திவிட்டு கண்டும் காணாமல் கை விரித்துவிட்டது.
ஜாக்டோ ஜியோவின் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முழுமையான ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டாம். திமுக அரசின் கபட நாடக வேலையால் விடுமுறை நாளான இன்றும் கூட அரசு ஊழியர்கள் போராட்டக் களத்தில் உள்ளனர். லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சார்ந்தது ஜாக்டோ ஜியோவின் போராட்டம்.மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறோம் என மார்தட்டும் திமுக அரசு, இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.