ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மாதோபூர் மாவட்டத்தில் விஷ்ணு சர்மா என்பவர் வசித்து வருகிறார். டிரைவராக வேலை பார்த்து வரும் இவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனுராதா என்பவரை கடந்த ஏப்ரல் 20-ம் தேதி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் முடிந்த பின் அனுராதா விஷ்ணு சர்மாவின் வீட்டில் வாழ்ந்து வந்தார். அப்போது ஒரு நாள் இரவு நேரத்தில் குடும்பத்தினர் அனைவருக்கும் உணவு சமைத்து பறிமாறி உள்ளார்.

அதனை சாப்பிட்ட குடும்பத்தினர்கள் அனைவரும் மயக்கம் அடைந்தனர். இந்த நிலையில் அனுராதா வீட்டில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம், தங்க நகைகள் மற்றும் மொபைல் போன் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பின் விஷ்ணு காலையில் எழுந்து பார்த்தபோது அனுராதா காணாமல் போனது தெரிய வந்தது. அதோடு வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் காணாமல் போனதால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அனுராதா மற்றும் அவருக்கு உதவிய நபர்களை கைது செய்துள்ளனர். அனுராதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உணவில் மருந்து கலந்ததால் குடும்பத்தினர் அனைவரும் மயக்கமடைந்த நிலையில் நகை, பணம், மொபைல் போன்கள் ஆகியவற்றை திருடியது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து விஷ்ணு சர்மா ரூ. 2லட்சம் கடன் வாங்கி இந்த திருமணத்தை நடத்தியதாகவும் திருமணம் நடந்த 14 நாட்களில் தன் மனைவி இப்படி செய்வார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அனுராதா அவருடைய உறவினர் சுனிதா யாதவ் மற்றும் சியாம் ராஜ்பூத் ஆகியோரின் உதவியுடன் திட்டமிட்டு இதனை செய்துள்ளார் என்றும், தான் இப்போது கடனில் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.