தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் தற்போது மினி டைட்டில் பூங்கா பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் மினி டைட்டில் பூங்கா அமைக்கப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மீள விட்டான் பகுதியில் 32 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 63100 சதுர அடி பரப்பில் மினி டைட்டில் பூங்கா அமைய இருக்கிறது.

இதேபோன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டியில் 55 ஆயிரம் சதுர அடி பரப்பில் 30 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும், சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் வட்டத்தில் 55 ஆயிரம் சதுர அடி பரப்பில் 29 கோடி 50 லட்சம் ரூபாய் செலவில் மினி டைட்டில் பூங்கா அமைய இருக்கிறது.  மொத்தமாக 92 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் அமைய இருக்கும் மினி டைட்டில் பூங்காக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். மேலும் இந்த மினி டைட்டில் பூங்கா மூலம் உள்ளுரை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.