சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் எல்- 1 புள்ளியை சென்றடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்கலம் செங்குத்தான சுற்றுவட்ட பாதையில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய செப்டம்பர் 2ம் தேதி ஆதித்யா எல்-1 ஒன் விண்கலத்தை இந்தியா விண்ணில் செலுத்தியது.

ஆதித்யா விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லேக்ராஞ்ச் -1 புள்ளியை தற்போது சென்றடைந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுற்றுவட்ட பாதையில் சுற்றியபடி சூரியன் குறித்து ஆதித்யா ஆய்வு மேற்கொள்ளும். எல்-1 புள்ளியில் இருந்தபடி சூரியனை குறித்து ஆதித்யா விண்கலம் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், இந்தியா மற்றொரு அடையாளத்தை உருவாக்குகிறது. இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு மையம் ஆதித்யா-எல்1 இலக்கை அடைந்தது. மிகவும் சிக்கலான மற்றும் சவாலான விண்வெளிப் பயணங்களை உணர்ந்து மேற்கொள்வதில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். இந்த அசாதாரண சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுகிறேன். மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளைத் தொடர்ந்து தொடர்வோம்” என தெரிவித்துள்ளார்.