காசாவின் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் தெற்கு பகுதிக்கு செல்ல மூன்று மணி நேரம் பாதை திறப்பு என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி 12.30 முதல் 3. 30 வரை பாதுகாப்பான வழித்தடத்தில் தாக்குதல் நடத்த போவதில்லை என  இஸ்ரேல், பாலஸ்தீனம் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. பைட் ஹலோன் – கான் யூனிஸ் வழித்தடத்தில் மூன்று மணி நேரம் எவ்வித தாக்குதலும் நடத்தப்படாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவில் முப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. எல்லையில் இஸ்ரேல் தரை படை வீரர்கள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகின்றனர். விரைவில் காசாவில் தரைவழி தாக்குதல் இஸ்ரேல் ஈடுபடுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இஸ்ரேல் படைகளுக்கு உதவும் வகையில் ஆயுதங்களுடன் 2ஆவது விமானத்தை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

முன்னதாக காசா மீது 6 நாட்களில் 6000 குண்டுகளை இஸ்ரேல் வீசி உள்ளது. தாக்குதலை தீவிரப் படுத்தி உள்ள நிலையில் வெளியேற மக்களுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்துள்ளது. 11 லட்சம் மக்களில் ஒரு லட்சம் பேர் கூட இதுவரை வெளியேறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.  பாலஸ்தீன மக்களை வெளியேறவிடாமல் ஹமாஸ் அமைப்பினர் தடுத்து நிறுத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி உள்ளது. காசா – எகிப்து எல்லையான ரபாவிலிருந்து வெளியேற பல கிலோமீட்டர்  ஆயிரக்கணக்கான வாகனங்கள் காத்திருக்கின்றன.