லக்னோவைச் சேர்ந்த புஷ்ரா ரசா அலி கான் (Bushra Raza Ali Khan) என்ற பெண், தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். தனக்கு ஒரு பிளாட் (Flat) பிடித்துப்போய், அதன் உரிமையாளரிடம் பேசிக் கொண்டிருந்தாராம்.

ஆரம்பத்தில் வாடகைக்குத் தரச் சம்மதித்த அந்த உரிமையாளர், பிறகு புஷ்ராவின் மத அடையாளத்தைத் தெரிந்துகொண்டதும் அந்த முடிவிலிருந்து பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட உரிமையாளர், மழுப்பலான காரணங்களைக் கூறி வீட்டைத் தர மறுத்ததாகவும், இது அப்பட்டமான மதப் பாகுபாடு என்றும் புஷ்ரா அந்த வீடியோவில் குமுறியுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் புஷ்ராவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மதத்தைக் காரணம் காட்டி ஒருவருக்கு அடிப்படைத் தேவைகளை மறுப்பது சட்ட விரோதம்” எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரம், “உரிமையாளரின் விருப்பம்” என்ற பெயரில் இதுபோன்ற செயல்கள் சமூகத்தில் சாதாரணமாகி வருவது ஆபத்தானது எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் லக்னோவில் மீண்டும் ஒரு ‘மதப்போர்’ விவாதத்தைத் தொடங்கியுள்ளது.