ஹரியானா மாநிலம் ரேவாரியில் உள்ள ஒரு மைதானத்தில் ஹாக்கி பயிற்சி பெற்று வந்த 17 வயது மாணவிக்கு, அவரது பயிற்சியாளரே எமனாக மாறியுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக அந்த மாணவிக்கு ஹாக்கி கற்றுக்கொடுத்து வந்த ஜூனியர் கோச் ஒருவர், சுமார் 4 மாதங்களுக்கு முன்பு மைதானத்தில் உள்ள கழிவறைக்கு அந்த மாணவியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்தக் கொடூரத்தால் அந்த மாணவி கர்ப்பமடைந்த நிலையில், கடந்த ஜனவரி 5-ம் தேதி அவருக்குத் திடீரென கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து, மாணவியின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்போதுதான் தனக்கு நேர்ந்த கொடுமைகளை அந்த மாணவி கண்ணீருடன் விவரித்துள்ளார். இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன்பேரில் அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸார், போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்தப் பயிற்சியாளரைக் கைது செய்துள்ளனர். சமீபத்தில் தேசிய துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளர் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில், தற்போது ஹாக்கி பயிற்சியாளரும் கைதாகியுள்ளது விளையாட்டுத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
